சென்னை: 2014ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சிப்பெற்று பல் மருத்துவப் படிப்பிற்காக விண்ணப்பித்த ஜெயரஞ்சனி, பல் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். அவருக்கு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பல் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கி 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்றே கல்லூரிக்குச் சென்று சேர முடியாததால் மறுநாள் கல்லூரிக்குச் சென்றபோது மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 30ஆம் தேதியே முடிந்துவிட்டதாகக் கூறி அவருக்குச் சேர்க்கை வழங்கக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து மாணவி ஜெயரஞ்சனி தாக்கல்செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தாத தேர்வுக் குழுவின் தவறுதான் மாணவிக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், இடம் ஒதுக்கியது குறித்துச் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குத் தெரிவிக்கப்பட்டும், நிர்வாக ஒதுக்கீட்டில் வேறு மாணவரைச் சேர்த்த தனியார் கல்லூரியும் ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டினார்.