தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மீதான குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: தினசரி வாழ்க்கையில் திருக்குறளைப் பின்பற்ற அறிவுரை! - குட்கா விவகாரம் குறித்த தீர்ப்பு

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான குட்கா உரிமை மீறல் நோட்டீசை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தினசரி வாழ்க்கையில் திருக்குறளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Feb 11, 2021, 9:09 AM IST

சட்டப்பேரவைக்குள் 2017ஆம் ஆண்டு குட்கா கொண்டுசென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்துசெய்ததுடன், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கூடிய உரிமைக் குழு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, அதை ரத்துசெய்து நேற்று (பிப். 10) தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில், குட்கா பொருள்கள் உற்பத்தி, இருப்புவைத்தல், போக்குவரத்து, விநியோகம், விற்பனைக்கு மட்டுமே தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையைத் தடைசெய்வதாக, அவற்றைக் காட்சிப்படுத்த எந்தத் தடையும் விதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, காட்சிப்படுத்த தடைவிதிக்கப்படாத நிலையில், அனுமதியின்றி அவற்றைக் காட்சிப்படுத்தினர் என்ற கேள்வியே எழாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்துகளைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, உரிமைக் குழு புதிய நோட்டீசை அனுப்ப முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, உரிமைக் குழு தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உறுப்பினராக உள்ள சட்டப்பேரவை முன்னவரான துணை முதலமைச்சருக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதால் அவர்கள் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதிராக முடிவெடுக்கக் கூடும் என்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாதத்தை நிராகரித்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சபாநாயகர் பதில் மனு தாக்கல்செய்ய முன்வராததால், உரிமை மீறல் பிரச்சினை எழுப்பி, உரிமைக் குழுவுக்கு அனுப்பிவைத்த விவகாரம் தொடர்பாக எந்த ஆதாரங்களும் தாக்கல்செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், சபையின் தகுதி அறிந்து ஆராய்ந்து அதற்கேற்ப பேச வேண்டும் எனப் பொருள்படும், ‘அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, தினமும் திருக்குறள் படித்து சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்குவது மட்டுமல்லாமல், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்கள் தினசரி வாழ்க்கையில், சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் திருக்குறளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:'மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரும்' - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details