சென்னை:சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தன்னுடைய மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை ஹேம்நாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.