சென்னை:தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர, 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும்; அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.
மேலும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 500 போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். தற்போது குறிப்பிட்ட தேதியில் காவல் துறை அனுமதி வழங்குவதாக கூறினால், அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.