சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தஹில் ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமாணியின் பணியிடமாறுதல் பரிந்துரைக்கு தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை சார்ந்தது, அங்கு வழக்குத் தொடராமல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நீதித் துறை உத்தரவை பிறப்பிக்கவில்லை, அது நிர்வாக உத்தரவு எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்து விசாரித்து, இவ்விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.