கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. மேலும், மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் எனவும், இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - கரோனா கட்டுப்பாடுகள்
சென்னை: தமிழ்நாடு அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க இ-பாஸ் பெற தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு அரசின் உத்தரவு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால், முந்தைய நாளான சனிக்கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துவிடுகிறது. இதனால் தகுந்த இடைவெளிக்கு அர்த்தமற்றதாகிவிட்டது. இதனால் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, கட்டுப்பாடுகளைக் குறைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.