காவல் துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் காவல் துறை புகார் ஆணையம் அமைக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரகாஷ் சிங் என்பவரின் வழக்கை விசாரித்தபோது,காவல் துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகள், லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிரான புகார்களை அளிக்க அனைத்து மாநிலங்களிலும் காவல் துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி காவல் துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காவல் துறை சீர்திருத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினருக்கு எதிரான புகார்களை அளிக்க மாவட்ட, மாநில அளவில் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
மாறாக மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு உள்துறைச் செயலாளர் தலைமையில் டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்ட விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் வடக்கு, கிழக்கு அமைப்பு செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாட்டில் சாத்தான்குளம் சம்பவம்போல் மேலும் நடைபெறாமல் தடுக்க உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதலில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க...'வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது?'