தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Chennai HC Dismissed OP Ravindranath victory case
Chennai HC Dismissed OP Ravindranath victory case

By

Published : Oct 16, 2020, 12:04 PM IST

Updated : Oct 16, 2020, 12:43 PM IST

09:54 October 16

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வாக்குக்காக பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப் பட்டுவாடா அதிகம் நடந்ததாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று (அக். 16) விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.பி ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, எம்பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, எம்பி ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு விசாரணையின் முடிவில் எம்பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லுமா? செல்லாதா? என, சென்னை உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ஓபிஎஸ் மகன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்படுமா? - அக். 16 இல் தீர்ப்பு

Last Updated : Oct 16, 2020, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details