தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நிலங்களின் விவரங்கள் தெரியாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது - உயர் நீதிமன்றம் - உயர் நீதிமன்றம்

சென்னை: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள் தெரியாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chennai HC

By

Published : Nov 18, 2019, 6:48 PM IST

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக் கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆட்சேபனைக்குரிய நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டு தலங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு கிடையாதா?, இந்த அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத்துறையை அரசு வற்புறுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த அரசாணை எப்படி கோயில்களுக்கு பலனை அளிக்கும்? இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும்தான் இருக்கிறார்கள் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 38 ஆயிரம் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு என்பதும், அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்குத் தடைகோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details