சென்னை:உலகிலேயே ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உள்ள நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நகரம் எது என்பது குறித்து தெற்கு ஆசிய இதழியல் கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது.
சென்னை, ஹைதரபாத், பெய்ஜிங், லண்டன் உள்ளிட்ட 130 முக்கிய பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் சென்னையில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, நகரங்களில் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்ததாக ஹைதராபாத்தில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சீனா நாட்டின் ஹர்பின் நகரில் 411 சிசிடிவி கேமராக்களும், லண்டனில் 399 சிடிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை முழுவதிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஹைதராபாத் நகரத்தில் 3 லட்சம் கேமராக்களும், பெய்ஜிங்கில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.