சென்னை:ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ்(25). இவர் நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (Gym Trainer) உடற்பயிற்சி ஆசிரியர் ஆகப் பணியாற்றி வந்தார். 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சபரிமுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற சபரிமுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். மேலும், கட்டுடல் கொண்டு வர ஸ்டிராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.