சென்னை:மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் சாமியார் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச படமெடுத்துவைத்து மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்தப் பெண் அளித்த புகாரில், "நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவருடன் விநாயகபுரம் பகுதியில் இயங்கிவரும் ஆசிரமத்திற்குச் சென்றபோது அங்கு ஆசிரமத்தை நடத்திவந்த சத்தியநாராயணன், அவரது மனைவி புஷ்பலதா அறிமுகமாகினர். அதன்பின்னர் அடிக்கடி ஆசிரமத்திற்குச் சென்றுவந்தேன்.
2016ஆம் ஆண்டு என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் விபூதி வாங்க ஆசிரமத்திற்குச் சென்றபோது அங்கிருந்த புஷ்பலதா என்னை வீட்டில் அமர வைத்துவிட்டு குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தார்.
அதன்பின் மயக்கம் ஏற்பட்டு 2 மணி நேரத்திற்குப் பின்பு எழுந்தபோது எனக்குப் பாலியல் வன்கொடுமை நடந்தது தெரியவந்தது.
சத்தியநாராயணனிடம் கேட்டபோது, உனக்கு அதிகமாக இருந்த பாவச்சுமையைக் குறைத்துள்ளேன் எனக்கூறி என்னை ஆபாசமாக எடுத்த படங்களைக் காட்டி இதை வெளியே சொன்னால் உனக்குதான் அசிங்கம் எனக் கூறி மிரட்டினார். அதன்பின்னர் ஆசிரமம் செல்வதைத் தவிர்த்துவிட்டேன்.
காவல் நிலையத்தில் புகார்
2020ஆம் ஆண்டு எனக்குத் திருமணமாகி கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்துகொண்டு சத்தியநாராயணன் என்னை ஆசிரமத்திற்கு வருமாறு கூறினார். ஆனால் நான் வரமறுக்கவே ஏற்கனவே எடுத்துவைத்த ஆபாச படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆசிரமத்திற்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் கருவுற்று, கருவை கலைக்க சத்தியநாராயணனும், அவரது மனைவி புஷ்பலதாவும் என்னை மிரட்டினர்.