தாம்பரம்: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியைச்சேர்ந்தவர், கந்தன். தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலை, காந்தி சாலை சந்திப்பு அருகே மினி வேனில் வெங்காயம், தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வியாபாரம் செய்யும் இடத்திற்கு வந்த மேற்கு தாம்பரம் குறிஞ்சி நகர் பகுதியைச்சேர்ந்த துளசி என்பவர் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. கந்தன் மாமூல் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு துளசி தகாத வார்த்தைகளால் பேசி, கந்தனை அடித்து வியாபாரத்திற்கு வைத்திருந்த வெங்காயம், தக்காளிகளை ரோட்டில் வீசியும், வியாபாரம் செய்ய பயன்படுத்திய மினி வேனில் இருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து கந்தனின் தலையில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கந்தனின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, 'யாரிடம் வேண்டுமென்றாலும் போய் புகார் அளித்துக்கொள், எனக்கு மாமூல் தராமல் இங்கு கடையை போடக்கூடாது, அப்படி நீ இங்கு கடை போட்டால் உன்னை காலி செய்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து துளசி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
காயம் அடைந்த கந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து கந்தன் தாம்பரம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார், மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக துளசியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!