சென்னை:தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது.
ஆனால் மிக்ஜாம் புயலால் அந்த போட்டியானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கபட்டது. ஃபார்முலா 4 பந்தயத்திற்காக சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பந்தய தடம் அமைக்கப்பட்டு வந்தது.
மேலும், இந்த பாதையில், 19 வளைவுகள் வருகின்றன. இதற்காக தீவுத் திடலில், அதனைச் சுற்றியுள்ள அண்ணா சாலை, சிவானந்தா சாலை என தீவுத் திடலை சுற்றியுள்ள சாலைகள் அரசு நிதி பங்களிப்புடன் பந்தயத்தடமாக மாற்றி அமைக்கும் பணியானது நடைபெற்றது. மேலும், தெருவிளக்குகள், சாலை தடுப்புகள் என அனைத்தும் அகற்றபட்டுள்ளது.
முன்னதாக, ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக மருத்துவர் ஸ்ரீஹரீஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், முன்னாள் அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஏ.வி.பாலுசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த போட்டி சென்னை நகருக்குள் நடத்தக்கூடாது என இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன.
இந்த போட்டியில், பங்கேற்க லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச வீரர்கள் 12 பேர்களும் இந்திய வீரர்கள் 24 பேர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த போட்டியானது மொத்தம் 4 சுற்றுகள் கொண்டவை. முதல் முன்று போட்டிகள் மெட்ராஸ் சர்வேதச கார்பந்தய மைதனத்தில் நடைபெறுகிறது.
இறுதி போட்டி தான் சென்னையில், அதுவும் இரவு நேரத்தில், நகரத்தில் ஓட்டக்கூடிய “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” ஆக நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையெல்லாம் தொடங்கியது. மேலும், இந்த போட்டிக்காக சுமார் 30 கோடி செலவிட்ட நிலையில், இருங்காட்டுக்கோட்டை கார் பந்தயம் மையதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ள நிவாரண நிதி.. டோக்கன் முறையில் வழங்க எதிர்ப்பு - நீதிமன்றம் தெரிவித்தது என்ன?