சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 இரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து பசுமையாக்கி அழகு படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் ௧௨ மேம்பாலங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.இவற்றில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். ஆகிய 5 மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.