சென்னை:தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4, 2023 அன்று புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) மாலை டிச.5 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பு மற்றும் வெள்ளம் வெடிந்தாலும், கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும் நிவாரண முகாம்களில் முடங்கியுள்ளனர். சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: மேலும், இன்று (டிச.6) காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவையானது இன்னும் கிடைக்கவில்லை என மக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சென்னையில் பல பகுதிகளில் இன்னும் தொலைத்தொடர்பு சேவையானது கிடைக்கவில்லை. வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் முழுவதுமாக நடைபெற்று வருகிறது.
பாதிப்பு உள்ளான இடங்களில் தொடரும் மீட்புப் பணிகள்: மேலும், வீடுகள் சுமார் முதல் தளம் மூழ்கும் அளவிற்கு வேளச்சேரி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்ததால் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ரப்பர் படகுகள் மீன்பிடி படகுகள் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.
மண்ணிவாக்கம் ஏரியில் உடைப்பு:மேலும், 70 முகாம்களில் 12,184 பேர்களுக்கு உணவுகள் வழங்கபட்டுள்ளன. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3,95,000 பேர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக, அதிக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பிடிசி கோட்ரஸ், சிடிஓ காலனி, அமுதம் நகர், அஞ்சுகம் நகர், கோகுலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்திற்கு முதல் தளத்தை முழுகும் அளவிற்கு மழைநீர் சூழ்ந்து தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது. மேலும், மண்ணிவாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து வெள்ளம் நீர் வடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் கைகொர்த்த மக்கள்:தொடர்ந்துவேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் எனப் பலறும் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தால், இதுவரை பள்ளிக்கரணை பகுதியில் 450 நபர்களும், மடிப்பாக்கம் பகுதியில் 200 பேரும், வேளச்சேரி பகுதியில், 65 பேரும், பெரும்பாக்கம் பகுதியில், 1200 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
முழுவீச்சில்மின் விநியோகம் சீரமைப்புப் பணிகள்:புயல் மற்றும் அதி கனமழை காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிச.3 நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை சீரமைக்க மின்வாரியம் சார்பில், 15 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.