சென்னை:உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷ்ரதா சர்மா(26). இவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி ஐஐடியில் பயோடெக்னாலஜி(பி.எச்.டி) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷ்ரதாவை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நான் உனது நண்பர் யோகேஷ் ராவல் என்றும், தனது மருத்துவச் செலவுக்காக 1.50 லட்சம் ரூபாய் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:செங்கோல் விவகாரம் கட்டுக்கதை அல்ல; புகைப்பட ஆதாரம் இருக்கு: ஆதீனம் அம்பலவான தேசிகர் தகவல்!
குறிப்பாக வாட்ஸ் அப்-ல் நண்பரின் புகைப்படமும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு ஷ்ரதா சர்மா 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் ஷ்ரதாவின் நண்பர் யோகேசை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தபோது தனக்கு எந்த உடல்நல குறைபாடு இல்லை எனவும், தான் பணம் கேட்டு அப்படி எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை எனவும் யோகேஷ் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன ஷ்ரதா சர்மா, சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மர்ம நபர் ஒருவர் யோகேஷ் பெயரில் புதிய வாட்சப் கணக்கைத் தொடங்கி ஷ்ரதா சர்மாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியதும், பணம் பறிபோனதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நாயை வெட்டி கொலை செய்த மூவர் கைது.. திருவள்ளூரில் நடந்தது என்ன?