செங்கல்பட்டு:சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அனுராதா. இவர்கள் கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவில் உள்ள தனது மகள் சுனந்தா வீட்டிற்குச் சென்றிருந்தனர். சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றிருந்த இவர்கள், நேற்று (7ஆம் தேதி) அதிகாலை விமானம் மூலமாக சென்னை திரும்பினர்.
இவர்களை இவர்களது கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவர் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கார் ஓட்டுநர் கிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர். சென்னை வந்தடைந்த பெற்றோரை அமெரிக்காவில் உள்ள மகள் சுனந்தா தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயன்றார். ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்கள் உறவினர்களை, மயிலாப்பூர் சென்று பார்த்து வரும்படி சுனந்தா கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சம்பந்தப்பட்டவர்கள் சென்று பார்த்தபோது, வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தம்பதியரைக் காணவில்லை. மேலும், வீட்டில் திருடு போனதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி சுனந்தா கேட்டுக்கொண்டதன் பேரில், புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் இணை ஆணையர் தலைமையில் காவல் துறையினர் விரைந்து சென்று, ஆடிட்டர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை செய்து, அவரது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகம் எழுந்ததாகத் தெரிகிறது. உடனடியாக கிருஷ்ணாவின் செல்போனை டிரேஸ் செய்தபோது, தமிழ்நாட்டை விட்டுத் தப்பிச்செல்வது தெரியவந்தது. மேலும், டோல்கேட் பகுதிகளில் அவரின் கார் கடந்து சென்ற சிசிடிவி காட்சியும் காவல் துறை வசம் சிக்கியது.