சென்னை: மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி, ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 500 மோசடி செய்த வழக்கில் "ஆப்ரோ' நிறுவன உரிமையாளர் யேசுதாஸ் உள்பட மூன்று பேருக்கு, தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.14 லட்சம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொளத்தூரில் ஆப்ரோ (aphro) அறக்கட்டளை மற்றும் ஐபி (ipee) அறக்கட்டளை என்ற இரு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்களின் தலைவராக ஐ.பி.யேசுதாஸ், செயலாளராக தேவி என்பவரும் செயல்பட்டு வந்தனர்.
கடந்த 2011-2014ஆம் ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த 43 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 547 உறுப்பினர்களிடம் விண்ணப்பக் கட்டணம், வைப்பீடு என ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 500 வசூலித்துள்ளனர்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு! உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு!
கடன் தருவதாக உறுதியளித்த யேசுதாஸ், கடன் தராமலும், வசூலித்த தொகையை திருப்பித் தராமலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏமாற்றியுள்ளார். இதில் ஏமாற்றம் அடைந்த குழு உறுப்பினர்கள், யேசுதாஸ் தங்களை ஏமாற்றி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
குழு உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், இரு அறக்கட்டளைகள், அதன் தலைவர் யேசுதாஸ், உதவியாளர் தேவி, குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிரிஜா ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ், சாதாரண, வசதி இல்லாத ஏழ்மை நிலையில் உள்ள மகளிரையும், சுய உதவிக்குழு உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளதால், இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும், யேசுதாஸ் உள்பட மூவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இந்த அபராதத் தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 35 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வாய்க்காலில் தோன்றிய திடீர் முதலை.. முதலையை காண குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!