சென்னை:வடகிழக்கு பருவமழை காற்றின் திசை மாறுபாட்டின் காரணமாக ஜனவரி 10ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முழுவதும் சென்னையில் தொடர் கன முதல் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
பொதுவாக தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடித்து வரும் வட கிழக்கு பருவ மழையில் இறுதியான மழை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரே நாளில் சென்னையில் அதிகபட்சமாக தரமணியில் 13 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும், மேற்கு மாம்பழத்தில் 10.8 செ.மீ மழையும், பூந்தமல்லியில் 10 செ.மீ மழையும், புழல் பகுதியில் 5 செ.மீ மழையும், வில்லிவாக்கத்தில் 6.3 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜனவரி மாதத்தில் இந்த அளவு சென்னையில் மழை கிடைத்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதியான கடலூர், நாகப்பட்டினம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து மழை குறைந்து வரும் என்றும் இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமானமழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.