சென்னை:சென்னை செனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூவில் இந்தியன் வங்கிக் கிளை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்த ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்தவர்கள் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் ஏ.டி.எம்-மில் அதிக அளவில் பணம் செலுத்திக் கொண்டிருந்த நபரைக் கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை ரோந்துப்பணி காவலர்கள் ஏ.டி.எம்-மில் பணம் செலுத்திக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் லட்சக் கணக்கில் பணம் இருந்ததாலும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
முதலாளியின் கறுப்பு பணம்
விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த யூசஃப் அலி (39) என்பதும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜி.ஆர் முகமது என்பவரிடம் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், தனது முதலாளியான ஜி.ஆர் முகமது மலேசியாவில் தொழிலதிபராக இருந்து தற்போது என்.எஸ்.சி போஸ் சாலையில் வசித்து வருவதாகவும், அவர் அளிக்கும் கறுப்பு பணத்தை இரவு நேரங்களில் ஏடி.எம் மையத்தில் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.