சென்னை:திருச்சி மாவட்டம் தில்லை நகரை சேர்ந்தவர் சூரஜ் கிருஷ்ணா(29). மருத்துவரான இவர் கடந்த ஆறு மாதங்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி முதுகலை நீட் நுழைவு தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். கடந்த 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வை சூரஜ் எழுதிய நிலையில் செவ்வாய்கிழமை தேர்வு முடிவு வந்துள்ளது.
தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் சூரஜ் மன உளைச்சலில் அவரது தம்பிக்கு பெற்றோரை பார்த்துக்கொள் என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனால் பல முறை அவர்கள் சூரஜின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. உடனடியாக இது குறித்து சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள சூரஜின் நண்பர் நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அவர் சூரஜின் வீட்டிற்கு வந்து பார்த்த போது இல்லாததால், இன்று சூரஜின் உறவினர் மகேஷ் காணாமல் போனதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரஜின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆன இடத்தினை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மத்திய அரசிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இளநிலை நீட் தேர்வு அச்சம், தோல்வி காரணமாக பல மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுத்த வந்த சம்பவங்களுக்கு இடையே மருத்துவராக உள்ள இளைஞர் ஒருவர் முதுநிலை நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு, எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளர்களுக்கு ஓர் நற்செய்தி!