தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் தீவிரமாகச் செயலாற்றிவருகின்றன. அதேபோன்று அதிமுக உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிவருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக விசிக சார்பில் சந்தித்துப் பேசினோம். திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விசிக வரவேற்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கையை எந்தக் கட்சிகளும் எந்த மாநிலமும் முன்னெடுக்கவில்லை. அதனடிப்படையில், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை திமுக முன்வைப்பதின் மூலம் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை திமுக வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்தையும் தனியார்மயமாக்கி பாஜக அரசு ஒடுக்க நினைக்கிறது. ஆனால், சமூக நீதிக்கான குரல் மீண்டும் அறிவாலயத்திலிருந்து ஓங்கி ஒலிக்கிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும் திமுக முன்னிறுத்தியுள்ளது. அதையும் விசிக சார்பில் பாராட்டுகின்றோம்.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இது தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இடையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் திமுக கூட்டணியில் போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார்.