சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 384-வது சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (22.08.2023) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியையும், தனியார் பத்திரிக்கை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி.1639, ஆகஸ்ட் 22ஆம் நாளை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் சிறப்புமிக்க நாளாகும். இந்நாள் 2004ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மராத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி எனற பெருமை பெற்றது சென்னை மாநகராட்சி.
சென்னை தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி மேலும் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளையின் மூலம் ஐபோன்களைப் பயன்படுத்தி ஆறு மாதக் கால புகைப்படப் பட்டறைகள் புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் நடத்தப்பட்டன.
சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளையானது, புகைப்படம் எடுப்பதை ஒரு நடைமுறையாகவும், கலையாகவும் ஊக்குவித்து கொண்டாடுகிறது. லென்ஸ் வழி கல்வித்திட்டம் மற்றும் இடைநிலை நிகழ்வுகள் மூலமாக ஆர்வத்தை தூண்டி, சுய வெளிப்பாடு மற்றும் பிரதிபலிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
சென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'அக்கம் பக்கம்' என்கிற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியில் இடம் பெறும் புகைப்படங்கள் சென்னை பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறு பிரதிபலிக்கும் கண்ணோட்டங்களாக அமைந்துள்ளன. பள்ளி வளாகங்களுக்குள் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இடம்பெறும் சூரிய ஒளியால் நனைக்கப்பட்ட தாழ்வாரங்கள், பூனைகள் மற்றும் காகங்கள், வண்ணங்களை தெளிக்கும் மிதிவண்டிகள், பள்ளிப் பைகள், விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குகளில் கண்ணிமைக்கும் நொடியில் ஊஞ்சலாடும் சில கணங்கள், பாட வகுப்புகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் சிரிப்புகளும், அக்கறைகளும் நிறைந்த காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டு இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.