தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இப்படியும் சைபர் கொள்ளைகளா..? - ரொம்ப கவனமாக இருங்க நண்பா!

பல்வேறு சைபர் குற்றங்கள் மூலம் 75 லட்ச ரூபாய் வரை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

By

Published : Jan 13, 2023, 4:00 PM IST

சென்னை:செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் தென்மண்டல சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், "தனது செல்போனுக்கு 12 ரூபாயில் மின்கட்டணம் செலுத்தலாம் என்று சலுகையுடன் கூடிய குறுந்தகவல் வந்ததாகவும், மின்வாரியத்தில் இருந்து வருவதாக எண்ணி, அந்த லிங்கை தொட்ட சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 98 ஆயிரத்து 915 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும்" புகார் தெரிவித்துள்ளார்.

அதே போல ஹரீஸ் என்பவர் அளித்தப் புகாரில், "தனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு, தங்களது எச்டிஎப்சி வங்கி கணக்கில் வாடிக்கையாளர் விவர ஆவணம் சமர்பிக்கப்படவில்லை என்றும்; உங்கள் வங்கிக் கணக்கை இன்றுடன் முடக்க இருப்பதாகவும், இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி லிங்கை தொட்ட போது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும்'' புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் கொள்ளை போன பணம் சென்ற வங்கிக்கணக்கை வைத்து மோசடியில் ஈடுபட்டது அரியானவைச் சேர்ந்த கும்பல் என்று கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் ஆய்வாளர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை, சைபர் கொள்ளையர்கள் மாற்றினாலும், அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்ட நபர்கள் அவர்கள் பயன்படுத்தும் மற்ற எண்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதன் அடிப்படையில் சைபர் கொள்ளை கும்பலை சேர்ந்த மஞ்சித் சிங், நாராயண சிங் ஆகிய இருவரை கைது செய்த தமிழ்நாடு தனிப்படை போலீசார், குர்கான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து டிரான்சிட் வாரண்ட் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தரகர்களை வைத்து நாடு முழுவதும் மிகப்பெரிய நெட்வோர்க் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்ததாகவும், சைபர் கொள்ளை கூட்டத்தின் தலைநகரமான ஜம்தாராவில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தரகர்களை வைத்து பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

வங்கி ஊழியர்கள் போன்றும், போலி கால் சென்டர்கள் வழியாகவும் பொது மக்களைத்தொடர்பு கொண்டு வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தணை தொடர்பான தகவல்களை பெற்று ஓடிபி மூலம் பணத்தை கொள்ளையடித்து வந்த சைபர் குற்றவாளிகள் தற்போது டிரெண்டுக்கு ஏற்றார்போல் குறுஞ்செய்திகளுடன் லிங்க் அனுப்பி, அதை தொடும் நபரின் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் போனில் உள்ள வங்கி செயலிகள், ஜிபே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் உள்ளிட்டவை மூலம் வங்கித் தரவுகளை உடனடியாக எடுத்து, பணத்தை நொடிப் பொழுதில் கொள்ளை அடித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்குச் செலுத்தினால், போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்று, நகை கடன், கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கி, அதற்குப் பணத்தை செலுத்தி நூதன முறையில் கொள்ளையடித்து வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாராயணன் சிங் நகைக்கடை ஏஜென்டாகவும், மஞ்சித் சிங் எல்.ஐ.சி. ஏஜென்டாகவும் பணிபுரிந்து கொண்டே இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாகவும், பிடிபட்ட இருவர் தவிர்த்து, மாநிலத்தில் பலத் தரகர்கள் இதேபோன்று சைபர் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாகவும், இவர்கள் அனைவரையும் ஜம்தாரா கும்பல் இயக்கி வருவதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

கைதான நாராயணன் சிங் மற்றும் மஞ்சித் சிங் மட்டும் 75 லட்ச ரூபாய் வரை, பொது மக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்து கொள்ளையடித்ததாகவும், அந்த பணத்தில் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை ஜம்தாராவில் உள்ள முக்கிய கொள்ளையனுக்கு அனுப்புவது தெரிய வந்ததாகவும் போலீசார் கூறினர்.

இந்த கும்பலில் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தும் போது, முக்கிய கொள்ளையர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக கொள்ளையடித்த பணத்தை நேரடியாக தங்கள் கைகளில் கொண்டு வராமல், பல்வேறு விதமாக பணத்தைப் பரிமாற செய்து காவல்துறையினரின் விசாரணை நேரத்தை அதிகரித்து, எளிதில் தப்பித்து விடுவதும், இருப்பினும் சைபர் கொள்ளையர்கள் எவ்வாறு தப்பிப்பார்கள் என்பது குறித்து வியூகம் வகுத்து, அவர்களை கைது செய்து வருவதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறுஞ்செய்தியில் வரும் லிங்கை தொட்டவுடன் வங்கிக் கணக்கில் இருந்து வந்த பணத்தை கொள்ளையடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிய சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், முக்கிய கொள்ளையனை கண்டுபிடிக்க பிடிபட்ட இருவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

அதேநேரம் முன்பின் அறியாத எண்ணில் இருந்து ஆசைகாட்டும் வகையிலான குறுஞ்செய்திகளோ, லிங்க் வந்தால் பொது மக்கள் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் வங்கிச்செயலிகள் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ரகசியம் காக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. களைகட்டிய பொங்கல் சந்தை..!

ABOUT THE AUTHOR

...view details