தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Crime: கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய ஓலா டிரைவர்... அண்ணன் கொலைக்கு காத்திருந்து பழி வாங்கிய தம்பி! - கைது

Chennai Crime News: சென்னையில் நிகழ்ந்த முக்கிய குற்றச் செய்திகள் குறித்து ஒரு சிறிய தொகுப்பைக் காணலாம்.

Chennai Crime News
சென்னை கிரைம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 7:32 AM IST

சென்னை:சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி, ராயப்பேட்டை வி.எம் நகரில் உள்ள தனது சகோதரரை சந்திப்பதற்காக, நேற்று முந்தினம் (செப்.10) இரவு சுமார் 10 மணி அளவில் ஓலா செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து சென்று உள்ளார். இதையடுத்து ஓலா இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வாகன ஓட்டுனர் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டை வி.எம் நகர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், கல்லூரி மாணவியை இறக்கிவிட்டவுடன் அவரை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, அவரை தள்ளிவிட்டு தப்பிவந்ததாக தெரிகிறது. அதன்பின்னர், இது குறித்து அந்த கல்லூரி மாணவி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓலா (ola) பைக் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அவர் பெயர் ரமேஷ் என்பதும், அவர் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பகுதி நேரமாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரமேஷை கைது செய்த ராயப்பேட்டை போலீசார் சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பிரபல ரவுடி கொலை.. காத்திருந்து பழி வாங்கிய தம்பி..!

எழும்பூர் பகுதியில் ரவுடியை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 22). இவர் மீது செங்குன்றம் மற்றும் புழல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடியாக வலம் வந்த ரமேஷ் என்கிற நாய் ரமேஷ் என்பவரை சிலார் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் சத்யா என்ற நபருடன் சேர்த்து 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சத்யா தற்போது சிறையில் இருந்து வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டு காலமாக உயிரிழந்த ரமேஷின் தம்பி ரூபன், தனது அண்ணனின் கொலைக்கு பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, நேற்று முந்தினம் (செப். 10) எழும்பூர் பேன்தியன் சாலையில் செல்லும் பொழுது, சத்யாவை தனது நண்பர்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார், சத்யாவின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் ரூபன், சரவணன் என்கிற வெள்ளை சரவணன், டேவிட் பிரகாஷ், அருண்குமார் ஆகிய 4 பேர் தான் இதை செய்தது தெரிய வந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

அதன் அடிப்படையில் அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அண்ணனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காகவே 3 ஆண்டு காலமாக காத்திருந்து கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு முன்பாகவும் இதே போல முன் விரோதம் காரணமாக, இரு தரப்பினரிடையே மாறி மாறி கொலைகள் செய்து சிறை சென்று விட்டு வருவதும், தற்போது சத்யா செய்தது 5வது கொலை எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து, 24 மணி நேரத்திற்குள் சிறையில் அடைத்த எழும்பூர் காவல்துறை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுவன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details