சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாநகர காவல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ 3 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும், உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி பதவி வரை உள்ளவர்களில், ஜூன் 30ம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவு அடையும் அதிகாரிகள் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கணினி வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், சிறப்புப் பிரிவுக்காகவும் பணி அமர்த்தப்பட்டவர்களைப் பணியிட மாற்றத்திற்கு உட்படுத்த தேவையில்லை எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும், நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும், ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது"எனச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போதை மாத்திரைகள் விற்ற மூவர் கைது:சென்னையில்போதைப்பழக்கத்திற்கு அடிமையான நபர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தி வருவது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதை மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டு இரண்டு கல்லூரி மாணவர்கள் சென்னையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
முன்னதாக, உரிய மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ், இளங்கலை பட்டதாரி சீனிவாசன், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருந்துகள் விற்பனை செய்யும் சுல்தான் மற்றும் அலாவுதீன் ஆகியோர் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
இவர்கள் பிரபல இணையதளம் மூலம் உரிய மருந்து சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கியதும், அவைகளை ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொரியர் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.