சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்..!
சென்னையில் கடந்த 7 நாட்களாக குட்கா, மாவா, புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 நபர்கள் கைது செய்துள்ளனர். 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.58 கிலோ கிராம் மாவா பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 47 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 28.58 கிலோ கிராம் மாவா, 3 செல்போன்கள், பணம் ரூ.1,00,430 மற்றும் 5 இருசக்கர வாகனங்களும் 1 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிகக்பட்டுள்ளது.
ரூ.4 லட்சம் கொள்ளை: சிசிடிவி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீசார்..!
கோடம்பாக்கத்தில் ஏசி சர்வீஸ் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.
சென்னை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (45). இவர் அதே பகுதியில் ஏசி சர்வீஸ் கடை ஒன்றைக் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். காலை கடையைத் திறக்க சுரேந்திரன் வந்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், அங்கு வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. உடனே இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்துப் பார்த்த போது, மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்..!
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மகேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று (ஜன.09) அதே பகுதியில் உள்ள பூமி ஈஸ்வரன் கோயிலில் அருகே உள்ள மைதானத்தில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மது அருந்திக் கொண்டிருந்த 20 பேரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரித்துள்ளார்.
இதனால், கோபம் அடைந்த அவர்களில் சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். இதை உதவி ஆய்வாளர் மகேஸ்வரி தனது செல்போனில்படம் பிடித்துள்ளார். ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்போனை பிடுங்க முயன்றுள்ளனர். மேலும், செல்போனை கொடுக்காததால் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதன் பின்னர், மகேஸ்வரி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப் பதிந்து தற்போது, விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை குற்றச்செய்திகள்: முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது..!