சென்னை: ரவுடி கும்பலைக் கைது செய்த காவல்துறை: சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது நான்கு கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 29 வழக்குகள் நினைவில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், நீதிமன்ற பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டது. இதனால் காவல்துறை துப்பாக்கி கார்த்திகை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை போரூர் அடுத்த மௌலிவாக்கம் பகுதியைப் பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கி கார்த்திகை காவல்துறை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவருடன் பதுங்கி இருந்த அவரது கூட்டாளி மணிவர்மா என்பவரையும் காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கத்திகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு: சென்னையில் பெண் ஐடி ஊழியரை எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 81,441 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தமிழகக் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாலியல் தொடர்பாக 1,510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கற்பழித்து கொலை செய்ததாக 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பெண்கள் மீது ஆசிட் வீசியதாக 24 வழக்குகளும், கடத்தலில் ஈடுபட்டதாக 961 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித கடத்தல் தொடர்பாக 1,354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வரதட்சணை கொடுமை காரணமாகப் பலியானவர்களின் வழக்கு 111 ஆகவும், வரதட்சணை கொடுமை வழக்குகள் 205 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கணவர் மற்றும் உறவினர்களால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை தொடர்பாக 3,037 வழக்குகளும், பாலியல் சீண்டல்கள் தொடர்பாக 3,948 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் காணாமல் போனதாக 41,748 வழக்குகளும், பெண் வன்கொடுமை மற்றும் போக்சோ தொடர்பாக 27,587 வழக்குகளும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.