சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் ஜாமீன் மனு மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜியின் முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை முதமை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ”குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மத்திய பாஜக ஆட்சியின் தூண்டுதலின் பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எப்போது நடைபெற்றது என குறிப்பிடப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, கடந்த 15ஆம் தேதி தீர்ப்புக்காக ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:‘பாஜகவுக்கு அக்கறை இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை எப்போதோ கொண்டு வந்திருப்பார்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!