சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) ஜூலை மாதத்திற்கான மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அம்மா உணவகம், பூங்கா, சாலை, மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் மற்றும் காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். மேலும், மண்டலத்திற்கு ஒரு பல் மருத்துவமனை, குப்பைகளை அள்ளும் வண்டிகளை சுத்தம் செய்தல், மழைநீர் வடிகாலில் இருக்கும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், “திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சென்னையில் குடிநீர் வாரியம் மிக மோசமாக உள்ளது. பல இடங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை, களத்திற்கு அதிகாரிகள் வருவது கிடையாது, ஒப்பந்ததாரர்கள் தான் வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தால் தான் திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது” என பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்குப் பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “குடிநீர் வாரியத்தால் சந்திக்கும் பிரச்னைகளை கடிதமாக கொடுங்கள், நான் இதனை சம்பந்தப்ப்பட்ட அதிகாரிகளிடம் முறையாகப் பேசுகிறன். விரைவில் குடிநீர் வாரியத்தின் இயக்குநர்களிடன் நான் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க கூறுகிறேன்” எனக் கூறினார். பின்பு சில உறுப்பினர்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், மாணவர்களின் கல்வி, கற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.