சென்னை: சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளது. இதனால் மாநகராட்சி கொசு ஒழிப்புப் பணியைத் தீவரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 280 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 304 கி.மீ நீளத்திற்குக் கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில் 65.22 கி.மீ. நீளத்திற்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 3,671 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 71 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது.
தீவிர கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 3,300 பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் 800 நபர்கள் சுழற்சி முறையில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.