மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் (டெங்கு / மலேரியா) உள்ளிட்ட நோய் தொற்றுகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சென்னை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், "பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
சென்னை மாநகராட்சியில் மழை காலங்கள் மட்டும் அல்லாமல் வருடம் முழுமையாக டெங்கு ஒழிப்பு பணிகள் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய்கள் வராமல் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளை ஆய்வு செய்ய வரும்போது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக நோயற்ற நகரமாக சென்னையை மாற்ற ஏதுவாக இருக்கும்.
மாநகராட்சியின் எச்சரிக்கையும் மீறி கொசு புழுக்கள் பரவும்படியாக இல்லங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் இருப்பின் அவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கிறேன். தேவையற்ற பொருட்களை வீட்டுக்குள் அல்லது வீட்டிற்கு வெளியே வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நன்னீரில்தான் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகின்றன என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்" என்றார்.