மழை காலம் தொடங்கியதால் மழைநீர் சேகரிக்கவும், சாலையில் நீர் தேங்காமல் இருக்கவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முதல்கட்ட நடவடிக்கையாக, 23.90 கோடி ரூபாயில் சென்னை மாநகராட்சி ஏரிகள், குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட நடவடிக்கையில் 33 ஏரிகள், குளங்களை மாநகராட்சி சீரமைத்து வருகிறது. அதன் மொத்தம் பரப்பளவு 4,43,919 சதுர மீட்டராகும்.
இதை மாநகராட்சி மூன்று திட்டங்களாக பிரித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை மெகா நகர மேம்பாட்டு பணியின் கீழ் ரூ. 12.94 கோடி செலவில் 10 ஏரிகள், குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தப்படியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9.91 கோடி செலவில் 13 ஏரிகள், குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக மாநகராட்சி சமூக பொறுப்பு கீழ் ரூ. 1.05 கோடி செலவில் 10 ஏரிகள், குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.