சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று முன்தினம் (செப்.18) வரை அரசு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட தடுப்பூசி மையங்களின் வாயிலாக 31.34 லட்சம் நபர்களுக்கு முதல் தவணையும், 15.39 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக அரசு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 46 லட்சத்து 74 ஆயிரத்து 342 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில் 1,600 தடுப்பூசி முகாம்கள்
தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 7.64 லட்சம் முதல் தவணை தடுப்பூசிகள், 2.48 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தமாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 525 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மாநில அரசு, மாநகராட்சி, தனியார் மருத்துவமனைகள் சார்பில் என நேற்று முன்தினம் (செப்.18) வரை மொத்தமாக 56 லட்சத்து 87 ஆயிரத்து 867 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (செப்.19) சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்களின் மூலம், இரண்டு லட்சத்து ஆயிரத்து 805 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 1,697 பேருக்கு கரோனா