சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், இன்று (நவ.01) வெளியிடப்பட்து.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னை ரிப்பன் மாளிகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இதற்கான பட்டியலை வெளியிட்டார்.
பட்டியல் வெளியீடு
அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் பாலாகங்கா, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை, கோரிக்கைகளை முன்வைத்தனர். வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் நீக்கம், சேர்ப்பு, வார்டுகள் எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சியினர் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
அதைக் கேட்டுக்கொண்ட ககன்தீப் சிங் பேடி, தலைமைத் தேர்தல் அலுவலர் பழனிகுமார் உடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் - 2021
சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 54 ஆயிரத்து 38ஆக உள்ளது. இதில் ஆண்கள் 19 லட்சத்து 92 ஆயிரத்து 198 பேரும், பெண்கள் 20 லட்சத்து 60 ஆயிரத்து 767 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆயிரத்து 73 பேரும் உள்ளனர்.
சென்னையில் குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி துறைமுகம். இதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி வேளச்சேரி. இதில் மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 40 லட்சத்து 54 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் 22 ஆயிரத்து 492 வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 25 ஆயிரத்து 515 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைபவர்கள், வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக இந்த மாதம் இறுதி வரை மாநகராட்சி மண்டல அலுவலகம் அல்லது இணையத்தில் (www.nvsp.in) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
இந்நிலையில், வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், “சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நவ.1 முதல் 30ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இதற்காக இம்மாதம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம்கள் நடத்தபட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைய உள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து அரசியல் கட்சிகள் சார்பில் கல்லூரிகளில் வாக்காளர்கள் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தயாராக உள்ளதாகவும், அரசு உத்தரவுகளைப் பின்பற்றி செயல்படுத்துவோம்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து