சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடர் மழையால், தாழ்வானப் பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்த மழைநீரினை வெளியேற்ற மாநகராட்சியின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் சுமார் 23 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மூன்று வேளை உணவு
மேலும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்கவைப்பதற்காக 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவ.8) காலை நிலவரப்படி, மழைநீர் தேங்கிய தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 887 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 350 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
200 வார்டுகளுக்கு 200 பொறுப்பாளர்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறையின் சார்பில் வரி வசூலிப்பவர், உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வேளையும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கக்கூடிய அளவிற்கு, உணவுசமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களே! உடனடியாக கரை திரும்புங்கள் - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்