சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்தது. சென்னை அதன் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசு ஊழியர்கள், மீட்புக்குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவை இன்றி அமையாதது ஆகும். தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்தாலும், சென்னையை மீட்க இரவு பகலும் பாராமல் சுமார் 16ஆயிரம் பணியாளர்களும், பிற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மூலம் நாள் ஒன்றுக்கு 4ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மழை வெள்ளத்திற்குப் பிறகு நாள் ஒன்றின் கணக்குப்படி 7ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக மழை வெள்ளத்தால் சேதமடைந்த மெத்தை, கட்டில், இரும்பு போன்ற கழிவுகளும் அதிக அளவில் வருகின்றன. மேலும் வெள்ளத்திற்குப் பிறகு குப்பைகளின் அளவு அதிகரித்து வருவதால் பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் தூய்மை பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் வெள்ளத்திற்குப் பிறகு தொடர்ந்து திடக்கழிவுகளின் எண்ணிக்கையும், கார்டன் கார்பேஜ் எனப்படும் செடி, மரம், இலை போன்ற குப்பைகளின் அளவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாகச் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணியானது நடைபெற்று வந்தது.