சென்னை:சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 7 முதல் மூன்று தவணைகளில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக 2014ஆம் ஆண்டு இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. அப்போதைய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய்களுக்கு இந்த தடுப்பூசியானது செலுத்தப்படும். தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள் காமாலை, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில், முதல் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 22.06.2015 முதல் 30.06.2015 வரை நடைபெற்றது. இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சியில் 2015ஆம் ஆண்டில் 5 முறை, 2016ஆம் ஆண்டில் 2 முறை மற்றும் 2022ஆம் ஆண்டில் ஒரு முறை என மொத்தம் 8 முறை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் மூன்று தவணைகளில் நடைபெற உள்ளது.
இந்த தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட பணிக்குழுக் கூட்டம் சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசியின் செயல்பாட்டு வழிமுறை கையேட்டினை மேயர் ஆர்.பிரியா வெளியிட்டார்.
இதையும் படிங்க: முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''முதல் தவணை 07.08.2023 முதல் 12.08.2023 வரை, இரண்டாம் தவணை 11.09.2023 முதல் 16.09.2023 வரை, மூன்றாம் தவணை 09.10.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற உள்ளது. சென்னை மாநகரில் இந்த தடுப்பூசி முகாம்கள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்பட தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது'' எனக் கூறினார்.
இந்தத் தடுப்பூசி முகாம்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பணிபுரிவார்கள் எனவும், இந்த முகாம்கள் நடைபெறுவதற்கு முன்னதாக விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் அந்த நாட்களில் தடுப்பூசிக்கு தகுதியான குழந்தைகள் ஆகியோரை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் எனவும், அனைத்து 0-2 வயதிற்கு உட்பட்ட விடுபட்ட குழந்தைகள், 2-5 வயதுள்ள விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தர். மேலும், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நடைபெறும் நாட்களில் அவரவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ''கூடுதல் பணம் வாங்காமல் இருக்க முடியவில்லை'' - டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!