சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்படுகின்றனர். தீநுண்மி பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரோனா தீநுண்மி உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்து முடிவிற்காக காத்திருப்பவர்கள் ஆகியோரை மாநகராட்சி நிர்வாகம் வீடு, கல்லூரிகள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் எனப் பல இடங்களில் தனிமைப்படுத்திவருகிறது.
இதுவரையில் மொத்தம் 21 லட்சத்து, ஓராயிரத்து, 808 பேரை மாநகராட்சி தனிமைப்படுத்தியுள்ளது. 16 லட்சத்து, 84 ஆயிரத்து, 198 பேர் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள நான்கு லட்சத்து 17 ஆயிரத்து 610 பேர் தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஏழு லட்சத்து 10 ஆயிரத்து 406 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.