சென்னை: தமிழ்நாட்டில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கரோனா பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா பரவல் விகிதம்7.9 ஆக அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு:கரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அதிக கூட்டம் கூடும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த இடங்களில் மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளியுடன் வருபவர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கூட்டம் அதிகம் கூடக்கூடிய, மூடிய அரங்குகள் பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும். தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மற்றவருடன் நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதார பணியாளர்களிடம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.