சென்னை:வட சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் ஒரு நாளைக்கு 2,800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் கொடுங்கையூரில் சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.
அதேபோல் தென் சென்னையில் சேகரிக்கப்படும் 2,600 டன் குப்பைகள், பெருங்குடியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. மலை போல் இருக்கும் குப்பைகளைப் பிரித்து நிலத்தை மீட்க கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் ரூ.648 கோடி செலவிலும், பெருங்குடி குப்பைக் கிடங்கில் ரூ.350 கோடி செலவிலும் பயோ மைனிங் முறை பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும்போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது பெருங்குடி குப்பைக் கிடங்கில் காய்கறி மற்றும் வீட்டுக்கழிவுகள் ஆகிய மட்கும் குப்பைகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு அவற்றிலிருந்து உரம் தயாரிக்கப்படுகின்றது.