Chennai Corporation Tenders: சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் மண்டலம் 4, 10, 13இல் ஆயுஷ் மருந்தகம் (ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி) இயங்கிவருகிறது. அதற்குப் பிறகு மண்டலம் 5, 6இல் இந்த ஆயுஷ் மருந்தகம் விரிவாக்கம் அடைந்தது.
இந்த ஆயுஷ் மருந்தகங்களில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பயனடைந்துவருகின்றனர் என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆயுஷ் மருந்தங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் (SECURITY AGENCY) மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருந்து சார் பணியாளர்கள்
மாநகராட்சியில் செயல்பட்டுவரும் ஆயுஷ் மருந்தகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருந்து சார் பணியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த, மின்னணு ஒப்பம் அக்டோபர் 20ஆம் தேதி கோரப்பட்டது.
அதில் ஐந்து ஒப்பங்கள் பெறப்பட்டு நான்கு தொழில்நுட்ப ஒப்பத்தில் தேர்வுசெய்யப்பட்டு நிதி ஒப்பம் நவம்பர் 17ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இந்த நான்கு ஒப்பந்ததாரர்களில் மோனிஷா தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மீதமுள்ள மூன்று நிறுவனங்களைவிட குறைவாக டெண்டர் மதிப்பு (tender quote) வழங்கி உள்ளது.
அதாவது ஒரு கோடியே 27 லட்சத்து இரண்டாயிரத்து 402 ரூபாய்க்கு டெண்டர் மதிப்பை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. அலுவலக மதிப்பீடாக ஒரு கோடியே 36 லட்சத்து 99 ஆயிரத்து 32-ஐ விட 7.28 விழுக்காடு குறைவாக உள்ளதால் இந்த டெண்டரை மோனிஷா தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
செவிலியர் பட்டப்படிப்பு பயிற்சி
இதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை தொற்று நோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பட்டப்படிப்பு பயிற்சி (ANM COURSE) 2017-2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இப்பயிற்சிக்குத் தேவையான முதல்வர், இதரப் பணியாளர்கள், மருத்துவமனை பணிகளுக்குத் தேவையான இதர மருத்துவ சார் பணியாளர்கள் (Para Medical Staff) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தது.
இந்தப் பணியாளர்களை மேலும் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அதே நிறுவனத்துக்கு மாநகராட்சி டெண்டர் வழங்கி உள்ளது. மொத்தம் 59 ஊழியர்களை ஓராண்டு நிரப்புவதற்கு ஒரு கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 546 ரூபாய்க்கு இந்த டெண்டரை மாநகராட்சி வழங்கி உள்ளது.
ஏற்கனவே இதேபோல் மாநகராட்சி உள்ள பல்வேறு மருத்துவம் சார்ந்த துறைக்கும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை வழங்கி உள்ளது சென்னை மாநகராட்சி.