சென்னை: பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, அர்மேனியன் தெரு சந்திப்பில் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சொந்தமான பழைமையான கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காக, சுமார் 15க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாகக் கட்டடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில், வழக்கம் போல நேற்று காலையும் பணிகள் நடந்து வந்தது
அப்போது சரியாக 10 மணி 15 நிமிடத்தில் நான்கு மாடிக் கட்டடம் முழுவதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் ஏழுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு உடன் மீட்பு பணி முடிவடைந்த நிலையில் எந்த ஒரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினரும் தேசிய மீட்பு துறையும் தெரிவித்தனர். இந்த கட்டிடம் இடிந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.