சென்னை:கடந்த 2011ஆம் ஆண்டு 174 சதுர கிலோ மீட்டராக இருந்த சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, கோவளம் வடிநிலப் பகுதியில் 12, 14, 15 ஆகிய பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்திற்கு தீர்வாக மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ஜெர்மன் நாட்டு வளர்ச்சி வங்கி நிதியுதவியில் 476 கி.மீ. நீளத்திற்கு சுமார் ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தொடங்கி நிறைவுற்றது. தற்போது எம்3 பணிகள், 52 கிலோ மீட்டர் தொலைவில் 270 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதற்கு தமிழ்நாடு கடற்கரை ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி சில குடியிருப்புவாசிகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் இதைப்பற்றி ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட குழு அமைத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்தத் திட்டத்தால் எந்தவித சுற்றுப்புற பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது crz1a மற்றும் crz1b ஆகிய பகுதிகளில் வரம்புக்குள் வருமா என்பதை crz வரைபடத்தில் இத்திட்டத்தை பொருத்தி ஆராய தங்களுக்கு அவகாசம் வேண்டும் என இக்குழு கேட்டிருந்தது. இதையடுத்து அக்குழுவிற்கு பசுமை தீர்ப்பாயம் மார்ச் 2ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கியது.