சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 6, 9, 12 14, 15 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நேற்று (ஆக.27) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு ஹர்மந்தர் சிங் கூறும்போது, "அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், வங்கிகள், கடைகள், சந்தைப்பகுதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத தனி நபர் மீதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் உள்ள இடங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனங்களை மூடி சீல்வைக்க வேண்டும்.
வெளி மாநிலம், வெளி ஊர்களிலிருந்து தொழில் நிறுவனங்களில் பணிபுரிய சென்னைக்கு வரும் நபர்களைக் கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
வீடுகள்தோறும் சென்று கரோனா தீநுண்மி தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் உரிமையாளர்களிடமும், வீட்டுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்ற கொசுக்கள் உருவாக ஏதுவான நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாநகராட்சி அலுவலகம், சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உருவாகும் வகையில் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள், அரசின் கரோனா தீநுண்மி தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகள் மீது மார்ச் ஒன்றாம் தேதி முதல் நேற்று முன்தினம் (ஆக.26) வரை ஒரு கோடியே 83 லட்சத்து 44 ஆயிரத்து 67 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.