சென்னை: கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்று (நவ.8) மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பல்லாவரம், வேளச்சேரி, தியாகராய நகர், தேனாம்பேட்டை, சௌகார்பேட்டை, சூளை, புரசைவாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தியாகராய நகர் பசுல்லா சாலை, திருமலை பிள்ளை சாலை, ஜி.என். செட்டி சாலை, பாண்டி பஜார், டாக்டர் நாயர் சாலை, புரசைவாக்கம் வெங்கடேச பக்தன் தெரு, அஸ்டபுஜம் தெரு, பெரம்பூர் பராக்ஸ் சாலை ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மழைநீரை அகற்றாத மாநகராட்சி
புளியந்தோப்பு கேவிஎம் கார்டன் உள்ளிட்டப் பகுதிகளில் சாலைகளிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் இடுப்பளவு மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்டப் பகுதிகளில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக கள ஆய்வில் எந்தவொரு பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தபோதும் அங்குள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படவில்லை.
இந்தப் பகுதியில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் இங்கு பூச்சிகள் மற்றும் எலி உள்ளிட்டவை நீரில் இறந்து மிதப்பதால் சுகாதார சீர்கேடான சூழலில் மக்கள் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக கள ஆய்வில் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற நிலையே ஏற்படுவதாகவும், மாநகராட்சி அலுவலர்களும், அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மழைநீரை அகற்றாத மாநகராட்சி மேலும் மாநகராட்சி சார்பில் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை தங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனால் மழைக்கு இடையே, இடுப்பளவு தண்ணீரில் மிதந்து சென்று உணவு வாங்கி வருகின்றனர்.
தங்களது பகுதிகளில் நிரந்தரமாக மழைநீர் தேங்குவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:பெரம்பூரில் முதலமைச்சர் ஆய்வு; காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமணத் தம்பதி