சென்னை மாநகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகளில் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் (Bio CNG) மறுசுழற்சி செய்யப்படுகிறது.
தென்னை மரக் கழிவுகள் போன்ற தோட்டக் கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 78ஆயிரத்து 136 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26ஆயிரத்து 242 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து, குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மீதமுள்ள கடைகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்க கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி வழங்கவில்லை என்றால் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 என்ற புகார் எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 மற்றும் 89255 22069 ஆகிய எண்கள் புகார் அளிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை என்விரோ நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 மற்றும் 1800-833-5656 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மூன்றாம் நிலை புகைத்தலால் தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் - ஆய்வில் தகவல்