சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் நேற்று (மார்ச்.16) தொடங்கின. இந்த பணிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெறுவது குறித்த வீடியோ ஒன்றை ஆணையர் ககன் தீப் சிங் பேடி களத்திலிருந்து வெளியிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள், 251 கையினால் கொண்டு செல்லும் புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் குடிசை பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப் பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், நீர்வழிக்கால்வாய்காளில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகின்றன, மேலும் நீர்வழி தடங்களில் பெரிய இயந்திரம் செல்ல முடியாத இடத்திற்கு ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.