தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரேநாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை! - சென்னை மருத்துவ முகாம்கள்

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 523 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை நடத்திய சென்னை மாநகராட்சி!
ஒரேநாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை நடத்திய சென்னை மாநகராட்சி!

By

Published : Jul 28, 2020, 1:30 AM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிகிறது.

இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 95 ஆயிரத்து 857 பேர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்து 29 பேர் உயிரிழந்தும் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 27) மட்டும் 15 மண்டலங்களில் 518 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

குறிப்பாக, அதிக பாதிப்புள்ள பகுதியான அண்ணா நகர், ராயபுரம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மேலும், தேனாம்பேட்டையில் 57 முகாம்களும், தண்டையார்பேட்டையில் 50 முகாம்களும், திரு.வி.க. நகரில் 47 மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்த மருத்துவ முகாம்களில் மொத்தம் 26 ஆயிரத்து 523 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஆயிரத்து 831 நபர்களிடம் சிறு அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் பணியாற்றிவருகின்றனர். 15 மண்டலங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை மாநகராட்சி ஆணையர் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details